மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடிச்செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை படித்தவுடன் இதைப்பற்றி அலசியே ஆகவேண்டும் என்று தோன்றியது.
திரு.குலாம் நபி ஆசாத் அவர்கள் ‘’இனி இந்தியாவில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக ASHA அமைப்பினரைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆணுறை மற்றும் பெண்ணுறை மக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று இலவசமாய் வழங்கப்படும்!’’ என்றும் ‘’இது நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்!’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் செய்தியைப் படித்ததும் ஒரு சாதாரண குடிமகனாய் எனக்குள் பல சந்தேகங்கள் முளைத்தது. அதை அமைச்சரிடம் நேரடியாக கேட்க முடியாவிட்டாலும் பிளாக்கிலாவது கேட்கலாமில்லையா?...
# உண்மையிலேயே வீட்டிற்கே சென்று இலவசமாய் காண்டம்ஸ் வழங்கும் இத்திட்டத்தால் இந்தியாவின் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்படும் என்று நம்புகிறீர்களா?!!!
# எய்ட்ஸ் வராமல் பாதுகாக்க காண்டம்ஸ் அவசியம் என்பது படித்தவர் முதல் பாமரன் வரையிலும் சென்றடைந்து விட்ட விழிப்புணர்வுச் செய்தி. ஆனால் அந்தச் செய்திக்கு கிடைத்த அதே வெற்றி இத்திட்டத்திற்கும் பொருந்துமென்று நம்புகிறீர்களா?
# எய்ட்சுக்காக காண்டம் அணிவதற்கும், குழந்தை வேண்டாம் என்பதற்காக காண்டம் அணிவதற்கும் இடையே மக்களின் மனதில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை வெறுமனே வீட்டிற்கே சென்று இலவசமாய் காண்டம்ஸ் வழங்குவதால் மட்டுமே மாற்றிவிடமுடியுமா?
# ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தளரா மனதுடனும்(!) விடா முயற்சியுடனும்(!) அடுத்தடுத்து பெண் குழந்தைகளை பெற்றுத் தள்ளிக் கொண்டிருக்கும் பெற்றோரிடம் இந்த இலவச காண்டம்ஸ் திட்டம் எடுபடுமா என்று எப்போதாவது யோசித்தீர்களா?
# காசு கொடுத்து கடையில் போய் காண்டம்ஸ் வாங்க வழியில்லாததால் மட்டுமே இந்தியாவில் மக்கள் தொகை பெருகிக் கொண்டிருப்பதாய் எந்த முட்டாள் உங்களுக்கு ஐடியா சொன்னது?!
# அதிக எண்ணிக்கையில் குழந்தை பெறுவதால் ஒரு தனிமனிதனின் பொருளாதாரத் தேவைகள் எப்படியெல்லாம் அவனை துன்புறுத்தும்? அவனின் குடும்ப மகிழ்ச்சி எப்படியெல்லாம் சீர்குலையக்கூடும்? என்பன பற்றியெல்லாம் கிராமம் கிராமமாய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அமல்படுத்துவதை விட்டுவிட்டு வெறுமனே இலவச காண்டம்களை வீட்டிற்கே சென்று விநியோகித்து விடுவதால் மட்டுமே எல்லாம் நடந்து விடக்கூடுமா?
# ஆணுறை கூடப்பரவாயில்லை… பெண்களுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?. பெண்ணுறையையும் வீடு வீடாய் இலவச விநியோகம் செய்யுமளவுக்கு இந்திய கிராமங்களில் விழிப்புணர்ச்சி வளர்ந்து விட்டதாய் நம்புகிறீர்களா?
இதுதான் பெண்ணுறை...
# உச்சநீதீமன்றம் கண்டனத்திற்கு மேல் கண்டனம் எழுப்பியும் மத்திய அரசின் சேமிப்புக் கிடங்குகளில் புழுத்து நாறி எலிகளுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் தானியங்களை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வராத உங்கள் அரசில் வீடு தோறும் இலவச காண்டம்ஸ் என்பது கொஞ்சம்கூட முரண்பாடாகத் தோன்றவில்லையா உங்களுக்கு?
# ஒருவேளை… தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட அரசு காண்டம்களை காலாவதியாகும்முன் காலி செய்வதற்கான திட்டமா இது?. இல்லை…ஏதாவது தனியார் காண்டம்ஸ் கம்பெனிகளுடன் கொள்முதல் உடன்பாடு ஏதேனும் செய்து கொண்டீர்களா?
அமைச்சரே… மக்கள் மனதில் எந்தவொரு விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தாமல் வெறுமனே வீடு வீடாய்ச் சென்று இலவசமாய் காண்டம்களை விநியோகிப்பதால் மட்டுமே மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திவிட முடியுமென்று கனவு கண்டு கொண்டிருந்தீர்களானால், அந்தக் கனவை கொஞ்சம் உற்று நோக்கினால் நீங்கள் வழங்கும் இலவச காண்டம்ஸ் எல்லாம் வீதி தோறும் சிறுவர்களால் ஊதிப்பறக்கவிடப்பட்டு பலூன்களாய்ப் பறக்கும் காட்சிகளும் கனவினில் தெரியக்கூடும்!.
இல்லாவிட்டால் ஏற்கனவே டெல்லியில் சென்ற வருடம் ஒருத்தர் காண்டம்ஸ் உடையை உருவாக்கியது போல நீங்கள் இலவசமாய் வழங்கும் காண்டம்களைக் கொண்டு செய்த பொருட்கள் பஜாரில் தினமும் குவிந்து கைவினைப் புரட்சி நடக்கலாம்!
ரூம் போட்டு உக்காந்து யோசிச்சு புதுசு புதுசா பீதியக் கெளப்பாம உருப்படியா ஏதாவது செய்ஞ்சீங்கன்னா உங்களுக்கு புண்ணியமாப் போகும்னு சொல்லிக்கிட்டு, உங்கள் இலவச காண்டம்ஸ் விநியோகத் திட்டம் வெற்றி பெற வாழ்த்துறேன்ங்க… காண்டம், ச்சீ வணக்கம்!
No comments:
Post a Comment