திருமணம் என்பது ஆயிரங்காலத்துப்பயிர்” அப்படீன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! ஆனா, இந்த ஆயிரங்காலத்துப்பயிரும், அதிலிருந்து வளரும் செடியான தாம்பத்தியமும், சர்வசாதாரணமான குறட்டை தொடங்கி கருத்துவேறுபாடு, சந்தேகம், கள்ளக்காதல் மற்றும் இதர பல வன்முறைகள் என எல்லாவகையான காரணங்களும் சேர்ந்து, விவாகரத்து என்னும் சட்டக்கரங்களால் பிடுங்கி எறியப்ப்பட்டுவிடுகின்றன!
நிம்மதியில்லாத திருமண வாழ்க்கையும், தாம்பத்தியமும் இருந்தாலும் ஒன்றுதான் இல்லையென்றாலும் ஒன்றுதான், என்னும் நிலைப்பாடுடன் விவாகரத்து செய்துகொள்பவர்கள் ஒரு வகை. ஆனால், தாம்பத்திய உறவை குலைக்க ஆயிரம் காரணங்கள் இருந்தபோதும், அதே தாம்பத்திய உறவை தொடர, வலுவான ஒரே ஒரு காரணம் இருந்துவிட்டால் போதும் என்று விவாகரத்தைப் பற்றி யோசிக்காமல், சேர்ந்துவாழ ஒரு வலுவான காரணத்தை தேடுபவர்கள் மற்றொரு வகை! இவ்விரண்டு வகையினரில் யாருடைய எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து, ஒரு நாட்டின் விவாகரத்து விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது! அப்படி நிர்ணயிக்கப்பட்டிருக்கும் உலக நாடுகளின் விவாகரத்து விகிதங்களில், மிகவும் அதிகமான சதவிகிதத்தையும், மிகவும் குறைந்த விவாகரத்து சதவிகிதத்தையும் உடைய சில நாடுகளின் பட்டியல் கீழே….
உலக நாடுகளின் விவாகரத்து சதவிகிதம் (2002)!
Rank | Country | Percent |
1 | India | 1.1 |
2 | Sri Lanka | 1.5 |
3 | Japan | 1.9 |
4 | Republic of Macedonia | 5.0 |
5 | Bosnia and Herzegovina | 5.0 |
6 | Turkey | 6.0 |
7 | Armenia | 6.0 |
8 | Georgia | 6.6 |
9 | Italy | 10.0 |
10 | Azerbaijan | 10.3 |
11 | Albania | 10.9 |
12 | Israel | 14.8 |
13 | Spain | 15.2 |
14 | Croatia | 15.5 |
15 | Greece | 15.7 |
16 | Singapore | 17.2 |
17 | Poland | 17.2 |
18 | Romania | 19.1 |
19 | Slovenia | 20.7 |
20 | Bulgaria | 21.1 |
21 | Switzerland | 25.5 |
22 | Portugal | 26.2 |
23 | Slovakia | 26.9 |
24 | Moldova | 28.1 |
25 | Latvia | 34.4 |
26 | Canada | 37.0 |
27 | Hungary | 37.5 |
28 | Netherlands | 38.3 |
29 | France | 38.3 |
30 | Lithuania | 38.9 |
31 | Germany | 39.4 |
32 | Iceland | 39.5 |
33 | Ukraine | 40.0 |
34 | Norway | 40.4 |
35 | United Kingdom | 42.6 |
36 | Russia | 43.3 |
37 | Czech Republic | 43.3 |
38 | Austria | 43.4 |
39 | Belgium | 44.0 |
40 | Denmark | 44.5 |
41 | Estonia | 46.7 |
42 | Luxembourg | 47.4 |
43 | Finland | 51.2 |
44 | Belarus | 52.9 |
45 | United States | 54.8 |
46 | Sweden | 54.9 |
இந்தப்பட்டியலில் குறைவான விவாகரத்து சதவிகிதத்தில் முதலிடத்தைப் பிடித்திருப்பது இந்தியா! இதில் ஆச்சரியப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை (இருந்தா மற்மொழியில நீங்க சொல்லுங்க தெரிஞ்சிக்குவோம்!). ஆனால், அதிகமான விவாகரத்து சதவிகிதத்தில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஸ்வீடன், அதைத் தொடர்ந்து எல்லாவற்றிலும் முதலிடம் பிடிக்கும் நம்ம அமெரிக்கா, இதில் மட்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனா பெரிய வித்தியாசமெல்லாம் இல்ல!
உலக நிலவரப்படி, விவாகரத்து செய்வோர் குறைவாக உள்ள இந்தியாவில், அதற்க்கு என்ன காரணம் என்பது குறித்த பொதுவான, தனிப்பட்டக் கருத்துகள் ஏராளம் இருப்பினும், திட்டமிட்ட ஆய்வுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கையில், கிட்டத்தட்ட முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில், கொடுமையான பிரச்சினைகளே இருந்தாலும்கூட, ஏன் சில மனைவிகள், தங்களின் கொடுமைக்கார கணவனை பிரிவதில்லை என்பதற்க்கான காரணங்களை பட்டியலிடும் ஆய்வு ஒன்று இருக்கிறது. அந்த ஆய்வில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, பட்டியலிடப்படும் காரணங்கள் என்னென்ன, அப்படீங்கிறதையெல்லாம் கொஞ்சம் அலசிபார்க்கத்தான் இந்தப் பதிவு!
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!
Image source:http://www.reportit.me.uk
கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின், உறவுகள்மீதான அவர்களின் கருத்து, முக்கியமாக அந்த உறவுகளைத் தொடர்வதற்க்கும், துண்டிப்பதற்க்குமான காரணங்கள், அவர்களின் கணவர்கள்/உறவுகுறித்த சாதகமான கருத்துகள் ஆகியவற்றை ஆய்வுசெய்த இதுவரையிலான ஆய்வுகள் சில இருந்தபோதும், அது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பியதால், ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டதாகச் சொல்லும் ஆய்வாளர் பேட்ரீஷியா ஒ’ கேம்போ, கனடாவின் டோரோன்டோவிலுள்ள, புனித மைக்கேல் மருத்துவமனையின், உள் நகர ஆரோக்கிய ஆய்வுமையத்தில் இயக்குனர் ஆவார்! இவருடன் இந்த ஆய்வில் பங்குபெற்ற பிற ஆய்வாளர்கள், நியூ யார்க் நகரிலுள்ள, பூங்கா நகரத்தின் அடெல்ஃபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்!
அமெரிக்காவின் தேசிய மனநல ஆய்வு மையத்தின் உதவித்தொகையுடன் செய்த ஆய்வில் திரட்டப்பட்ட, நகரத்தில் வாழ்கின்ற, குறைந்த வருமானமுள்ள, சுமார் 611 அமெரிக்க பெண்களின் அனுபவங்களை ஆய்வுசெய்ததில்,
- சர்வே செய்யப்பட்டவர்களில் சுமார் 42.8% பெண்கள், சர்வே செய்வதற்க்கு முந்தைய வருடத்தில் தங்களின் கணவர்களால் அல்லது நெருங்கிய ஆண் துணைகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும்,
- உடல் ரீதியிலான துன்பங்களைவிட, மன/உளவியல் ரீதியிலான துன்பங்களே ஒரு தொடர்கதையாய் இருக்கிறது. ஆனால், இவற்றில் செக்ஸ் துன்பங்கள் மிக மிக குறைவே என்றும்,
- சுமார் 2.3% பெண்கள், அவர்களின் கணவர்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக, கட்டுப்படுத்துபவர்களாக இருந்தார்கள் என்றும்,
- சுமார் 1.2% பெண்கள் மட்டும், அவர்களின் கணவர்கள் மோசமான வன்முறை சார்ந்த பழக்கவழக்கங்கள், செயல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்ததாகவும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்த பல்வேறு உண்மைகள் தெரியவந்துள்ளது!
ஆனால், இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பெண்கள், துன்புறுத்தும் தங்கள் கணவர்கள், ஆண் துணைகள் சில நல்ல குணங்களையும் கொண்டிருந்ததாக சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, சுமார் 54% பெண்கள், தங்கள் கணவர்கள் மிகவும் நம்பக்கூடியவர்களாக, சார்ந்து வாழ்க்கூடியவர்களாக இருந்ததாகவும், 21% பெண்கள், தங்கள் கணவர்கள் பாசமானவர்கள் அல்லது பல நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்!
மூன்று வகையான கணவர்களும், அவர்களின் இயல்புகளும்!
இந்த ஆய்வு முடிவுகளின்படி, மனைவிகளை துன்புறுத்தும் ஆண்களை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். உதாரணமாக,
- நம்பிக்கையானவர்கள்/சார்ந்துவாழத் தகுதியுடையவர்கள் ஆனால் துன்புறுத்துபவர்கள் (ஆய்வுக்குட்பட்டவர்களில் , 44%): ஆய்வின்படி, இவ்வகை ஆண்கள் வன்முறைச் செயல்களுக்கும், கட்டுப்படுத்தும் குணத்துக்கும் குறைந்த மதிப்பெண்களும், நல்ல குணங்களுக்கும், சார்புத்தன்மைக்கும் அதிக மதிப்பெண்களும் பெற்றிருந்தார்கள் எனபது குறிப்பிடத்தக்கது!
- நல்ல குணமுள்ளவர்கள் ஆனால் கட்டுப்படுத்துபவர்கள் (38%): வன்முறைச் செயல்கள், சார்புத்தன்மை மற்றும் நல்ல குணங்களுக்கும் ஓரளவுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்றும், ஆனால், முந்தைய வகையினரைவிட அதிகப்படியாக கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டிருந்ததால், மொத்தத்தில் அதிகமான வன்முறைச் செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் இவர்கள்!
- ஆபத்தான அளவுக்கு துன்புறுத்தக்கூடியவர்கள் (18%): வன்முறைச் செயல்கள், கட்டுப்படுத்தும் தன்மை மற்றும் சட்டரீதியான குற்றங்களில் ஈடுபடும் தன்மைக்கும் மிகவும் அதிக மதிப்பெண்களும், சார்ப்புத்தன்மை மற்றும் நல்ல குணங்களுக்கும் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தவர்கள் இவ்வகையினர் என்பது குறிப்பிடத்தக்கது!
ஆண்களால் துன்புறுத்தப்படும் பெண்கள் மற்றும் சமுதாய அமைப்புகளின் உதவிகள் பெறாத பெண்களின் கருத்துகளை நேரடியாக கேட்டு அறிந்துகொள்ளும் இம்மாதிரியான ஆய்வுகளின் முடிவுகளைப் பார்க்கையில், இவ்வகையில் செய்யப்படும் ஆய்வுகளில் நல்ல பலனும், ஒரு அர்த்தமும் இருப்பது தெரியவருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்! மேலும், பெண்களின் குறைகளை கேட்பதன் முக்கியத்துவத்தையும், பெண்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்க்கான வழிகளை புரிந்துகொள்வதற்க்கும் உதவும் இந்த ஆய்வு, அதற்க்கான முதல் படியே என்றும், இதை மேலும் அதிகப்படுத்த இன்னும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்றும் கருத்துத் தெரிவிக்கிறார் பேட்ரீஷியா!
Violence Against Women என்னும் மாத ஆய்விதழின் கடந்த 2010 மார்ச் மாத இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாயின என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் பற்றிய சிறுகுறிப்பு!
இந்த ஆய்வில் கலந்துகொண்ட சுமார் 611 பெண்களும் ஆப்பிரிக்க அமெரிக்க பெண்களாவர். அவர்களின் சராசரி வயது 35. இதில் பாதிக்கு மேறபட்டவர்களுக்கு 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் இருக்கின்றன. இப்பெண்களில் சுமார் 47% உயர்கல்வி முடிக்காதவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மாதம் $300 வருமானமுள்ளவர்கள். 45% எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள்!
சர்வே செய்யப்பட்டவர்களில் சுமார் 45%, தங்கள் கணவர்கள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும், சட்டரீதியான்ம சிக்கல்கள் உடையவர்களாகவும், சிறைக்கைதிகள் என்றும் தெரிவித்துள்ளார்கள். சுமார் 9%, தங்கள் கணவர்கள் போதை ஊசி பழக்கம் மற்றும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது!
அமெரிக்காவில் பெண்களுக்கெதிரான கொடுமைகள்!
அமெரிக்கா மற்றும் கனடாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் என்பது சமுதாய மற்றும் மக்கள் நலப்பிரச்சினையாக இருக்கிறது என்கிறது கடந்த 2005 ஆண்டின் கனடா நாட்டு புள்ளிவிவர அறிக்கை ஒன்று! உதாரணமாக, கனடாவின் 6% ஆண்கள் மற்றும் 7% பெண்கள், கடந்த 5 வருடத்தில் குறைந்தது ஒரு முறையாவது தங்களின் வாழ்க்கைத்துணையின் வன்முறைச் செயல்களுக்கு உட்பட்டார்கள் என்றும், சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி, ஆண்டொன்றுக்கு சுமார் 19 லட்சம் அமெரிக்க பெண்கள் உடல் சார்ந்த வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்றும் தெரிவருகிறது!
பெண்கள் உள்ளாகும் குடும்ப வன்முறைகளாவன!
உடல் சார்ந்தவை: அறைதல், குத்துதல், உதைத்தல், கடுமையாக தள்ளிவிடுதல், கழுத்தை நெரித்தல், எரித்தல், கடித்தல், பொருள்கள் கொண்டு தாக்குதல் ஆகியவை!
உணர்வு ரீதியானவை: அவமரியாதையாக நடத்துதல், பயமுறுத்தப்படுதல், வற்புறுத்தப்படுதல், அதீத பொறாமை மற்றும் நண்பர்கள் அல்லது உறவினர்களிடமிருந்து பிரித்து வைக்கப்படுதல் ஆகியவை!
பாலியல் வன்முறைகள்: உடலுறுவுக்கு வற்புறுத்தப்படுதல் மற்றும் கர்பத்தடை சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கபாடதது ஆகியவை!